தஞ்சாவூர்

தப்பியோடிய விசாரணை கைதி; விரட்டி பிடித்த போலீஸார்!

10th Sep 2019 10:17 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர்,  யாதவர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமதாஸ். இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் மகன் மாணிக்கராசு என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே சில காலங்களாக பாதை சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிறது.
இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ராமதாஸ் உள்பட சுமார் 10 பேரும்,  மாணிக்கராசு உள்பட  சுமார் 4 பேரும் திடீரென உருட்டுக்கட்டைகளாலும்,  அரிவாளாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். 
இதில் காயமடைந்த இருதரப்பினரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
சம்பவம் தொடர்பாக ஒரத்தநாடு காவல் உதவி ஆய்வாளர் விஜய்கிருஷ்ணன் வழக்குப் பதிந்து இருதரப்பினரையும் தேடி வந்தார்.  இந்நிலையில்,  ராமதாஸை போலீஸார் கைது செய்து திங்கள்கிழமை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது,  திடீரென ராமதாஸ் அங்கிருந்து தப்பியோடினார்.  உடனே சுதாரித்த உதவி ஆய்வாளர் விஜய்கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், ராமதாஸை விரட்டிச் சென்று ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனை அருகே மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டுவந்தனர். பின்னர்,  ஒரத்தநாடு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி  நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT