தஞ்சாவூர்

பொலிவுறு நகர திட்டம்: தஞ்சாவூர் மாநகரில் நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தத் திட்டம்

7th Sep 2019 10:23 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாநகரில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளைப் பொலிவுறு நகரத்துக்காகத் தரம் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாநகரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் மாநகருக்குள் 42 கி.மீ. தொலைவில் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் சாலைகளை உலகத் தரத்துடன் மேம்படுத்தத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆய்வுப் பணிகளை ஒருமாத காலமாக மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைத் துறையின் சாலைகள் மேலும் பல வழித்தடமாக அகலப்படுத்தப்படவுள்ளது. மேலும், மழை நீர் வடிகாலுடன்கூடிய நடைபாதை அமைத்தல், பாலங்களை அகலப்படுத்துதல், சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த ஆய்வை முடித்த பின்னர்,  விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து, அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்படவுள்ளது. அரசு அனுமதி வழங்கியவுடன், பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. 
பள்ளியக்ரஹாரம் முதல் ரயிலடி வழியாக டான்டெக்ஸ் ரவுண்டானா வரையிலான சாலை, ராமநாதன் ரவுண்டானா முதல் புதிய பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் நெ. 1 வல்லம் சாலை, தஞ்சாவூரிலிருந்து - மருத்துவக் கல்லூரி வழியாக வல்லம் செல்லும் சாலை, அண்ணா நகர் முதல் புறவழிச்சாலை வரையிலான நாஞ்சிக்கோட்டை சாலை, ஈஸ்வரி நகர் முதல் ரெட்டிபாளையம் செல்லும் சாலை மற்றும் மாதாகோட்டை சாலை ஆகியவை மேம்படுத்தப்படவுள்ளது.
இதையொட்டி, நெடுஞ்சாலைத் துறை திருச்சி வட்டக் கண்காணிப்புப் பொறியாளர் சு. பழனி முதல்கட்ட ஆய்வுப் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டார். 
அப்போது,  தஞ்சாவூர் கோட்டப் பொறியாளர் எஸ். பாலசுப்பிரமணியன், உதவிக் கோட்டப் பொறியாளர்கள் க. மாரிமுத்து, சு. ரேணுகோபால், உதவிப் பொறியாளர் ச. இளவரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT