தஞ்சாவூர்

தஞ்சாவூரில் செப். 10 - 14 இல் கலைகளின் சங்கமத் திருவிழா: தமிழக ஆளுநர் தொடக்கி வைக்கிறார்

7th Sep 2019 10:25 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் கலைகளின் சங்கமத் திருவிழாவை செப். 10-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார்.
இம்மையத்தில் தில்லி சங்கீத நாடக அகாதெமி,  தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரை இசை,  நடனம்,  பொம்மலாட்டம்,  நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் கலைகளின் சங்கமத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதில், அகில இந்திய அளவில் தலைசிறந்த 200-க்கும் அதிகமான கலைஞர்களும், 30-க்கும் அதிகமான கலைக்குழுவினரும் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். பாரம்பரியமிக்க கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த விழா நடைபெறவுள்ளது.
இதன் தொடக்க விழா செப். 10ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க உள்ளார். இதில், தில்லி சங்கீத நாடக அகாதெமி தலைவர் சேகர் சென்,  வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து, செப். 14ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் கருத்தரங்கமும்,  மாலை 6 மணி முதல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
இதில், செப். 10-ம் தேதி இசை, 11-ம் தேதி நாட்டுப்புற மற்றும் பழங்குடியின கலைகள், 12-ம் தேதி நடனம், 13-ம் தேதி பொம்மலாட்டம், இதர பாரம்பரிய கலைகள், 14-ம் தேதி நாடகம் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
ஆளுநர் வருகையை முன்னிட்டு,  ஆட்சியரகத்தில் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில்,  ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் எம். பாலசுப்ரமணியம் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT