தஞ்சாவூர்

ஒட்டங்காடு ஊராட்சியில்  நீர்நிலைகளை தூர்வாரி தண்ணீர் நிரப்ப கோரிக்கை

7th Sep 2019 10:24 AM

ADVERTISEMENT

பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு பகுதியில் உள்ள நீர்நிலைகள், வரத்துவாரிகளை தூர்வாரி சீரமைத்து,  குளங்களுக்கு தண்ணீர் நிரப்பித் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டங்காடு ஊராட்சிக்குள்பட்ட ராஜாளிக்குளம் செல்லும் கிளை வாய்க்கால்,  கடந்த 15 ஆண்டுகளாக தூர்வாரி சரி செய்யப்படாததால்,  நான்கு முக்கியக் குளங்கள் தண்ணீர் நிரப்ப முடியாமல் வறண்டு கிடக்கின்றன. 
கல்லணைக் கால்வாய் கடைமடைப் பகுதியைச் சேர்ந்த ராஜாளிக்குளம், கருந்தல்குண்டு, மிதியக்குடி மற்றும் அய்யனார் கோயில் குளம் ஆகியவற்றில் தண்ணீர் இல்லாததால், இதன் மூலம் பாசனவசதி பெறும் சுமார் 400 ஏக்கர் நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. 
இந்தக் குளங்களுக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் வரும் துருசுகள்,  ஷட்டர்கள் அடைபட்டுக் கிடப்பதால் நீர் வர வழியின்றி  இக்குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களில் புல், பூண்டுகள், புதர்கள் மண்டிக் கிடப்பதாலும், கஜா புயலால் விழுந்த மரங்கள் சாய்ந்து கிடப்பதாலும், வரத்துவாரிகள் அடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்  அன்றாடம் குளிப்பதற்கும், குடிப்பதற்கும், கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் கூட தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். 
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கருணாநிதி கூறியது : தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும்,  நீர்நிலைகளை தூர்வாருவதில் அலட்சியப் போக்கே காணப்படுகிறது. ஒட்டங்காடு பகுதியில் பல ஆண்டுகளாகவே நீர்நிலைகள் தூர்வாரப்படாமலேயே உள்ளன.  இதுகுறித்து, உரிய அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை. மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு   தண்ணீர் வீணாகி கடலில் சேரும் நிலையில்,  இப்பகுதி நீர்நிலைகள் வறண்டுபோய் மண்மேடிட்டு காணப்படுவது வேதனையளிக்கிறது. எங்கள் பகுதி நீர்நிலைகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, வரத்து வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரி குளங்களுக்கு தண்ணீர் நிரப்பித் தர ஆட்சியர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT