தஞ்சாவூர்

"நேரடி நெல் விதைப்பில் ஏக்கருக்கு 3,000 கிலோ மகசூல் பெறலாம்'

4th Sep 2019 08:54 AM

ADVERTISEMENT

சம்பா பருவ நெல் சாகுபடியில் நேரடி நெல் விதைப்பில் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்தால் 3,000 கிலோ மகசூல் பெற முடியும் என வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் (அம்மாபேட்டை) வெ. சுஜாதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தற்போது சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. காற்றின் மேலடுக்குச் சுழற்சியால் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெறப்படும் பாசன நீரை உடனடியாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் பெறப்படும் பாசன நீர் வீணாகாமல் உடன் சாகுபடி பணிகளை மேற்கொள்வது அவசியம்.
அடியுரம்: ஏக்கருக்கு 400 கிலோ ஜிப்சம், 2 டன்கள் தொழு எரு,  டி.ஏ.பி 50 கிலோ ஆகியவற்றை இட்டு நன்றாக உழவு செய்ய வேண்டும்.  
நேரடி விதைப்புக்கு ஏக்கருக்கு 40 கிலோ விதை தேவை. 3 பாக்கெட் அல்லது அரை லிட்டர்  அசோஸ்பைரில்லம், 3 பாக்கெட் அல்லது அரை லிட்டர்  பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை 2 லிட்டர் ஆறிய அரிசி கஞ்சியில் நன்கு கலந்து, விதையுடன் கலந்து நிழலில் உலர்த்தி உடனடியாக விதைப்பு செய்ய வேண்டும். 
களைக்கட்டுப்பாடு: விதை முளைத்த 3 - 4 ம் நாளில் ஏக்கருக்கு பிரிட்டிலாக்ளோர் 500 மி.லி. அல்லது சோபிட் 100 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒன்றை 20 கிலோ மணலில் நன்கு கலந்து தூவ வேண்டும். இந்த முறை விடுபட்டுவிட்டால்,  விதை முளைத்த 8-ம் நாள் ஏக்கருக்கு பூட்டாக்ளோர் 400 மி.லி. அல்லது தயோபென்கார்ப் 400 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒன்றை 20 கிலோ மணலுடன் நன்கு கலந்து தூவிட வேண்டும்.
இதுவும் விடுபட்டு, களைகள் முளைத்து விட்டன என்றால், விதை முளைத்த 15 - 20 ஆம் நாளில் பிஸ்பைரிபாக் சோடியம் (நாமினி கோல்ட்) 80 மி.லி.யை 200 லிட்டர் நீரில் கலந்து களைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
இடைவெளி நிரப்புதல்: விதை முளைத்த 25-ம் நாளில் சைக்கிள் டயருக்குள் 30 குத்துக்கள் இருக்குமாறு அவசியம் போக்கிடம் நிரப்ப வேண்டும். 
இவ்வாறு செய்வதன் மூலம் சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும். விதை முளைத்த 30-ம் நாளில் ஏக்கருக்கு 25 கிலோ யூரியா, 45-ம் நாளில் ஏக்கருக்கு 25 கிலோ யூரியா, 60-ம் நாளில் ஏக்கருக்கு 25 கிலோ யூரியா, 90-ம் நாளில் ஏக்கருக்கு 25 கிலோ யூரியாவுடன் 20 கிலோ பொட்டாஷ், பூக்கும் தருணத்தில் ஏக்கருக்கு 25 கிலோ யூரியா ஆகியவற்றை மேலுரமாக இட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதைத்த 50-ம் நாளில் ஒரு கைக்களை எடுத்து விட்டு, வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி லிட்டருக்கு 10 மி.லி. வீதம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
நேரடி விதைப்பில் கவனிக்க வேண்டியவை: பருவத்தில் விதைப்பு, மேடு பள்ளமில்லாத நிலம், காலத்தில் களைக்கொல்லி பயன்பாடு, பயிர் எண்ணிக்கை பராமரிப்பு, சரியான நீர் மற்றும் உர நிர்வாகம் போன்ற சாகுபடி முறைகளை மேற்கொண்டு ஏக்கருக்கு 3,000 கிலோ மகசூல் பெற முடியும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT