தஞ்சாவூர்

நீண்ட கால விதைநெல் ரகங்கள் மீது விவசாயிகள் ஆர்வம்: தண்ணீர் இல்லாததால் விதைக்க முடியாமல் தவிப்பு

4th Sep 2019 09:15 AM

ADVERTISEMENT

காவிரி டெல்டாவில் கிட்டத்தட்ட மறக்கப்படும் நிலையில் இருந்த நீண்ட கால விதை நெல் ரகங்கள் மீது விவசாயிகளிடையே மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் 150 முதல் 160 நாள்கள் வயதுடைய நீண்ட கால விதை நெல் ரகங்கள்தான் முதன்மையானதாக இருந்து வந்தது. குறிப்பாக,  சி.ஆர். 1009 (சாவித்திரி) என்கிற நீண்ட கால ரக விதை நெல் பயன்பாடு பெரும்பான்மையாக இருந்தது. வறட்சியையும், வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் தன்மையுடைய இந்த ரகம் மழை, பனி, வறட்சி எல்லாவற்றையும் தாங்கி வளரக்கூடியது.
ஆனால்,  இது பொதுரகம் என்பதால்,  சன்ன ரகத்தைவிட விலை குறைவாகவே விவசாயிகளுக்குக் கிடைத்தது. எனவே, விலை அதிகமாகக் கிடைக்கக்கூடிய சன்ன ரகத்தின் மீது விவசாயிகளுக்கு மோகம் ஏற்பட்டது. மேலும், காவிரியில் 8 ஆண்டுகளாக உரிய காலத்தில் தண்ணீர் கிடைக்காததாலும், மழை பொழிவும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததாலும், நீண்ட கால விதை நெல் ரகங்களைப் பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்தது.
இதனிடையே, ஆந்திரா பொன்னி என்கிற பிபிடி 5204 போன்ற மத்திய கால விதை நெல் ரகங்கள் மீது மோகம் அதிகரித்தது. எனவே, நீண்ட கால விதை நெல் ரகங்களின் பயன்பாடு குறைந்து, சன்ன ரகங்களின் பரப்பளவு அதிகரித்தது. 
ஆனால், ஆந்திரா பொன்னி ரகத்தில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படுவதால், விவசாயிகள் நஷ்டத்தைக் சந்திக்கும் நிலை உருவாகிறது. மேலும், விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு விலையும் கிடைப்பதில்லை. எனவே, இதன் மீதான மோகமும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டு மேட்டூர் அணையில் இருந்து ஆக. 13-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் சி.ஆர். 1009 சப்1 என்கிற நீண்ட கால விதை நெல் ரகங்கள் அதிக அளவில் விற்பனையாகிறது. மாவட்டத்திலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் வழக்கமாக 150 முதல் 300 டன்கள் வரை மட்டுமே நீண்ட கால விதை நெல் ரகங்கள் விற்பனையாகும். ஆனால், நிகழாண்டு 707 டன்கள் விற்பனையாகியுள்ளன. தனியாரிடம் ஏறத்தாழ 1,500 டன்கள் நீண்ட கால விதை நெல் ரகங்கள் விற்பனையானதாகக் கூறப்படுகிறது. 
இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 800 டன்களும், நாகை மாவட்டத்தில் 500 டன்களுக்கு அதிகமாகவும் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் நீண்ட கால விதை நெல் ரகங்கள் விற்பனையாகியுள்ளன. டெல்டாவில் இன்னும் இந்த ரகத்துக்கான தேவை அதிகமாகவே உள்ளது. சில இடங்களில் இந்த ரகம் கிடைக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.
இந்த ரகத்தில் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. எந்தவித இயற்கை சூழலாக இருந்தாலும், அதையெல்லாம் தாங்கி வளரக்கூடியது. இதற்கு பராமரிப்புச் செலவும் குறைவு. எனவே, இந்த ரகத்தை விரும்புகிறோம் என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநர் வ. பழனியப்பன் தெரிவித்தது:
கடந்த 8 ஆண்டுகளாக காவிரியில் தாமதமாகத் தண்ணீர் வந்ததால் நீண்ட கால விதை நெல் ரகங்கள் பயன்பாடு குறைவாக இருந்தது. இந்த ஆண்டு ஆக. 13ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால்,  நீண்ட கால விதை நெல் ரகங்களை விதைக்க விவசாயிகள் விரும்புகின்றனர். நீண்ட கால விதை நெல் ரகங்களை விதைப்பதற்கு ஆக. 15 முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை ஏற்ற காலம். அதன் பிறகு விதைத்தால் இளம்பயிராக இருக்கும்போது அக்டோபர், நவம்பர் மாத பெரு மழையில் சிக்கி பாதிப்புக்குள்ளாக நேரிடும். எனவே, செப்டம்பர் முதல் வாரத்துக்குப் பிறகு மத்திய கால ரகங்களை விதைப்பதுதான் நல்லது என்றார் அவர்.
ஆனால், காவிரியில் எதிர்பார்த்த அளவுக்குத் தண்ணீர் வரத்து இல்லை. இதனால், பாசன வாய்க்கால்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, நேரடி விதைப்பு மட்டுமே பரவலாக நடைபெறுகிறது. நாற்று விட்டு நடவு செய்யும் விவசாயிகள் நீண்ட கால விதை நெல்லை வாங்கி வைத்து, தண்ணீருக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT