தஞ்சாவூர்

எல்.ஐ.சி.யில் தென் மண்டல அளவில் பாலிசி, பிரீமியம் வருவாயில் தஞ்சாவூர் கோட்டம் முதலிடம்

4th Sep 2019 08:58 AM

ADVERTISEMENT

எல்.ஐ.சி.யில் தென் மண்டல அளவில் பாலிசி,  பிரீமிய வருவாயில் தஞ்சாவூர் கோட்டம் முதலிடம் பெற்றுள்ளது என்றார் தஞ்சாவூர் கோட்டத்தின் முதுநிலைக் கோட்ட மேலாளர் கே. வெங்கட்ராமன்.
எல்.ஐ.சி. நிறுவனத்தின் 64 ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தஞ்சாவூர் கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் முதுநிலைக் கோட்ட மேலாளர் கே. வெங்கட்ராமன் தெரிவித்தது:
எல்.ஐ.சி. தஞ்சாவூர் கோட்டம் நிகழ் நிதியாண்டில் 2.46 லட்சம் பாலிசிகள் மற்றும் ரூ. 526 கோடி முதலாண்டு பிரீமிய வருவாயை லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது. இக்கோட்டத்தில் 27 கிளை அலுவலகங்கள்,  26 துணைக் கிளை அலுவலகங்கள் உள்ளன. இக்கோட்டம் நிகழ் நிதியாண்டில் ஆக. 31ஆம் தேதி வரை 65,775 பாலிசிகளை ரூ. 186.86 கோடிகளுக்கு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம், மொத்த பாலிசிகள்,  தவணை முறை பிரீமிய வருவாய் அடிப்படையில் தென் மண்டல அளவில் இக்கோட்டம் முதலிடத்தில் உள்ளது.
மேலும், இக்கோட்டம் நிகழ் நிதியாண்டில் ஆக. 31-ம் தேதி வரை 62,250 முதிர்வு மற்றும் வாழ்வுகாலப் பயன் உரிமங்களை ரூ. 354.20 கோடிகளுக்கும், 3,388 இறப்பு உரிமங்களை ரூ. 45.18 கோடிகளுக்கும் பட்டுவாடா செய்து, பாலிசிதாரர் சேவையில் தொடர்ந்து தனது முத்திரையைப் பதித்து வருகிறது.
நிகழாண்டு ஜூலை 31-ம் தேதி வரை 39,756 காலாவதியான பாலிசிகள் ரூ. 38.79 கோடிகளுக்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இக்கோட்டத்தில் இதுவரை 4,41,220 பாலிசிகளின் கீழ் ரூ. 173.57 கோடி கடன் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும்,  பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவையை மேம்படுத்துவதற்காக செல்லிடப் பேசி எண்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 17,50,236 பாலிசிகளுக்கு செல்லிடப்பேசி எண் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேரடி மற்றும் இணையவழி வணிகம் மூலம் இக்கோட்டத்தில் நிகழ் நிதியாண்டில் ஆக. 31-ம் தேதி வரை 174 பாலிசிகள் விற்கப்பட்டு, ரூ. 5.41 கோடிகள் முதல் பிரீமியத் தொகையாகப் பெறப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் குழுக் காப்பீட்டுத் துறை கடந்த நிதியாண்டில் 498 திட்டங்களை 2,39,474 பேருக்கு வழங்கி ரூ. 85.57 கோடிகளை முதல் பிரீமிய வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. பல தரப்பட்ட குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கும் காப்பீடு வழங்கி சாதனைப் படைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இப்பிரிவின் மூலம் மொத்தம் 1,303 பேருக்கு ரூ. 24.52 கோடி இறப்புக் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது. நிகழ் நிதியாண்டில் ஆக. 31-ம் தேதி வரை 159 திட்டங்களை மொத்தம் 1,63,543 பேருக்கு வழங்கி ரூ. 23.24 கோடி முதல் பிரீமிய வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. மேலும், இறப்பு உரிமத் தொகையாக இப்பிரிவின் மூலம் நிகழ் நிதியாண்டில் 577 பேருக்கு ரூ. 12.13 கோடி காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்றார் வெங்கட்ராமன்.
அப்போது, வணிக மேலாளர் கே. ராம்குமார், மேலாளர்கள் எம். மகேந்திரவர்மன் (வாடிக்கையாளர் உறவு மேலாண்மை), எம். விமலா (உரிமம்), ஆர். நேரு (விற்பனை), கிளை மேலாளர் வி. தங்கசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT