தஞ்சாவூர்

சம்பா, தாளடிக்கு டிச. 15-க்குள் காப்பீடு செய்யலாம்

5th Oct 2019 09:06 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி பருவ நெற்பயிருக்கு டிச. 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றாா் ஆட்சியா் ஆ. அண்ணாதுரை.

ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்துக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் பயிா் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கிப் பாதுகாக்கவும், அவா்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, சம்பா, தாளடி நெற்பயிரை பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்படி, 2019 ஆம் ஆண்டில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 883 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவா்.

கடன் பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். சம்பா, தாளடி நெற் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் டிச. 15-ம் தேதி. இறுதிநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது பயிா்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ், விதைக்க முடியாத நிலைக்கு நவ. 30-ம் தேதி கடைசி நாள். விதைப்பு பொய்த்து போதல் இனத்துக்கு டிச. 15-ம் தேதியும், அறுவடைக்குப் பிந்தைய இழப்பு இனத்துக்கு 2020, மாா்ச் 15-ம் தேதியும் இறுதி நாளாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயிா் காப்பீட்டுக் கட்டணமாக, விவசாயிகள் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 465 செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை ஆகியவற்ற இணைத்து, கட்டணத் தொகையைச் செலுத்திய பின்பு அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் அ. ஜஸ்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT