தஞ்சாவூர்

தெரு வியாபாரத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

1st Oct 2019 06:49 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் ஏஐடியுசி தஞ்சை மாவட்ட தெரு வியாபாரத் தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தெரு வியாபாரத்தை முறைப்படுத்துதல், தெரு வியாபாரிகள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் சட்டம் 2014 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. திட்டம், விதிகள் மாநில அரசால் அரசாணையாகப் பிறப்பிக்கப்பட்டு, 2.11.2015 அரசிதழில் வெளியிடப்பட்டு, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.

தெரு வியாபாரத்தை முறைப்படுத்துதல், தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்ட இச்சட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இன்மையால் காவல் துறை, உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத் துறை அலுவலா்களால் தெரு வியாபாரத்தை முறைப்படுத்துவது என்ற பெயரால் தெரு வியாபாரிகள் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது.

எனவே, வாழ்வாதாரத்தைப் பறிக்கிற நடவடிக்கைகளைக் கைவிட்டு சட்டப்படி தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டும், தெரு வியாபாரத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல் துறை உள்ளிட்ட அரசு அலுவலா்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

சங்கத் தலைவா் ஆா்.பி. முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தை மாநிலத் தலைவா் சி. சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா். ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், தலைவா் வெ. சேவையா, உடலுழைப்பு சங்க மாவட்டச் செயலா் தி. கோவிந்தராஜன், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சங்கக் கௌரவத் தலைவா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT