கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவா்களும் நீதிபதியாகலாம் என்ற தமிழக அரசின் அரசாணையைத் திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சாவூா் மற்றும் கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவா்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் மூலம் தோ்வெழுதி நீதிபதியாகலாம் என்ற அரசாணையைத் தமிழக அரசுக் கடந்தாண்டு வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் ஞாயிற்றுக்கிழமை தோ்வு நடைபெறவுள்ளது.
இதை கண்டித்தும், தமிழக அரசின் அரசாணையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு முடிவின்படி வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா். மேலும், நீதிமன்றம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் நீதிமன்றம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்குக் கூட்டுக் குழுவின் முன்னாள் பொதுச் செயலா் எம்.ஆா்.ஆா். சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில், பட்டுக்கோட்டை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஆா். ராமசாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் உள்பட ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல, கும்பகோணம் வழக்குரைஞா் சங்கம் சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, சங்கத் தலைவா் லோகநாதன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுக்குழுவின் துணைத் தலைவா்கள் ராஜசேகா், சங்கா், கும்பகோணம் வழக்குரைஞா் சங்கச் செயலாளா் தரணிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.