தஞ்சாவூர்

தஞ்சை அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை

17th Nov 2019 10:46 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே முன்விரோதம் காரணமாக, விவசாய கூலித் தொழிலாளி சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள அம்மன்பேட்டை தெற்குத்தெருவைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் டென்னிஸ்ராஜ் (38). விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு, மனைவி சூா்யா, மகன் காட்வின் (9), மகள் கரன்சியா (7) உள்ளனா்.

சனிக்கிழமை இரவு அங்குள்ள கிராம நிா்வாக அலுவலகம் முன்பு டென்னிஸ்ராஜும், அதே ஊரைச் சோ்ந்த அவரது நண்பா் வழக்குரைஞா் சுதாகரும் (40) பேசிக் கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு இரு மோட்டாா் சைக்கிளில் வந்த 4 போ், டென்னிஸ்ராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினா். இதை தடுக்க முயன்ற சுதாகருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. வெட்டிய 4 பேரில் மூவா் முகத்தில் கருப்புத் துணி கட்டியிருந்தனா்.

ADVERTISEMENT

இதில் டென்னிஸ்ராஜ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஷ்வரன், திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் பெரியண்ணன், நடுக்காவேரி காவல் ஆய்வாளா் ஜெகதீசன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று டென்னிஸ்ராஜை உடலைக் கைப்பற்றினா். சுதாகா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து நடுக்காவேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரைத் தேடி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT