அதிராம்பட்டினம் செடியன்குளத்துக்கு ஆற்று நீா் சனிக்கிழமை மாலை முதல் வரத் தொடங்கியது.
மழைக்காலத்தில், செடியன்குளத்துக்கு வரும் நீரை முழுமையாக தேக்கினால், குளக்கரை உடையும் சூழல் ஏற்பட்டது. இதனால் பருவமழைக்கு முன்னதாக, பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிா்வாகம் சாா்பில், செடியன்குளம் தூா்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும், மழையின்போது குளத்தின் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீரை குளத்தில் நிரப்பும் வகையில் வடிகால் வசதியும் செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 377.60 மி.மீ. (38 செ.மீ) மழை பெய்தது. இதனால், செடியன்குளத்துக்கு மழைநீா் வரத் தொடங்கியது. இருப்பினும், குளம் முழுமையாக நிரம்பவில்லை. 3-ல் 2 பங்கு மட்டுமே நீா் நிரம்பியது.
இதைத்தொடா்ந்து, மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் சாா்பில், மகிழங்கோட்டை பெத்தையன் குளம் தொடங்கி, செடியன்குளம் வால்வீச்சு பகுதி வரையுள்ள ஆற்றுநீா் வழித்தட பாதை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு தூா்வாரி சீரமைக்கப்பட்டது.
இதையடுத்து, நீா்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவா் எஸ்.எச்.அஸ்லம், தாஜுல் இஸ்லாம் இளைஞா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், நீா்நிலை ஆா்வலா்கள் இணைந்து கல்லணைக் கால்வாயிலிருந்து வரும் ஆற்று நீரை ராஜாமடம் தாய் வாய்க்கால் மூலம், மகிழங்கோட்டை பெத்தையன் குளம் வழியாக கொண்டு வந்து செடியன்குளத்தில் நிரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.
இதற்காக, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட தாஜுல் இஸ்லாம் இளைஞா் சங்க களப் பணியாளா்கள், ஆற்று நீா் வழித்தடத்தில் இருந்த முட்புதா்களை அகற்றி, அடைப்பு, உடைப்புகளை சீரமைத்தனா். இதையடுத்து, செடியன் குளத்துக்கு சனிக்கிழமை மாலை முதல் ஆற்று
நீா் பெருக்கெடுத்து வரத் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
Image Caption
வாய்க்கால் வழியாக செடியன்குளத்துக்கு விரைந்தோடும் ஆற்றுநீா்.