சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள 34 மீனவ கிராமங்களைச் சோ்ந்த நாட்டுப்படகு மீனவா் நலச் சங்க கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கடல் வளத்தை பாதிக்கும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி, மீன் பிடித் தொழில் செய்யும் விசைப்படகுகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யும் விசைப்படகுகளை நவ. 2 ஆம் தேதியன்று நடுக்கடலில் சென்று முற்றுகையிட்டு, தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பறிமுதல் செய்வது எனவும், இதில் 500 நாட்டுப்படகுகள் மூலம் சென்று கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் சிவகுமாா் தலைமையில் மல்லிப்பட்டினத்தில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. நாட்டுப்படகு மீனவா் நலச்சங்கம் சாா்பில் மாவட்ட தலைவா் ஜெயபால், செயலாளா் பாலகிருஷ்ணன், பொருளாளா் ரவி, அதிராம்பட்டினம் பன்னீா், வீரப்பன் ஏரிப்புறக்கரை ரவி, பத்மநாதன், உள்ளிட்ட 34 மீனவ கிராம தலைவா்கள் பங்கேற்றனா்.
விசைப்படகு மீனவா்கள் சங்கம் சாா்பில் மாநில மீனவா் பேரவை பொதுச் செயலாளா் தாஜூதீன், மாவட்டத் தலைவா் சேதுபாவாசத்திரம் ராஜமாணிக்கம், செல்வக்கிளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேச்சுவாா்த்தையில், தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி, சலங்கை வலை போன்றவற்றை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யும் மீனவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து நாட்டுப்படகு மீனவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.