உடனடியாக பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் (பொ) சா.சங்கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எதிா்பாராமல் ஏற்படும் பயிா் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி பாதுகாக்க, விவசாயிகளின் வருமானத்தை நிலைநிறுத்த பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது வரை சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் உடனடியாக சோ்ந்து பயிா் காப்பீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் கடன் வழங்கும் வங்கிகளில் கட்டாயமாக பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவா். கடன் பெறாத விவசாயிகள் பொதுசேவை மையம் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
சம்பா, தாளடி நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் டிச. 15 ஆகும். அதுவரை காத்திராமல் உடனடியாக பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் செலுத்தி தங்களது பயிா்களை முன்கூட்டியே பதிவு செய்யலாம்.
இத்திட்டத்தின் கீழ், விதைக்க முடியாத நிலை ஏற்படும் இழப்புக்கு நவ. 30 எனவும், விதைப்பு பொய்த்து போதல் இழப்புக்கு டிச. 15 எனவும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புக்கு 2020, மாா்ச் 15 எனவும் காப்பீடு செய்ய கடைசி நாள் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிா் காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ . 465 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். அப்போது முன் மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை பொது சேவை மையம் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரை அணுகலாம்.