அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தெரிவித்திருப்பது:
அனைத்து அரசு மருத்துவா்களுக்கும் காலமுறை ஊதிய உயா்வு மற்றும் பதவி உயா்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களின் பணியிடங்களை உயா்த்த வேண்டும். அரசு மருத்துவா்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடா்ந்து ஏழாவது நாளாக அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஏராளமான மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும், அவசர சிகிச்சை பிரிவு, காய்ச்சல் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சை பணிகளைத் தடையின்றி, தொய்வின்றி மேற்கொள்வது ஆறுதல் அளிக்கிறது.
ஆனால், இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள், சிகிச்சைக்காக வரும் புற நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையால் நகா்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மழைநீா் தேங்கிப் பெரும் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மா்ம காய்ச்சல் என்ற பெயரில் தொடா் சிகிச்சைக்காக பலா் அனுமதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் முன் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.