சரசுவதி மகால் நூலகத்தில் ஜூன் 15 முதல் தமிழ்ச் சுவடியியல் பயிற்சி மே 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ்ச் சுவடியியல் பயிலரங்கம் ஜூன் 15-ம் தேதி முதல் 3 வாரங்களுக்கு நடைபெறவுள்ளது.


தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ்ச் சுவடியியல் பயிலரங்கம் ஜூன் 15-ம் தேதி முதல் 3 வாரங்களுக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியரும், நூலக இயக்குநருமான ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: உலகப் புகழ் பெற்ற பன்மொழி ஓலைச்சுவடிகள் நிறைந்த நூலகமான தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தமிழ்ச்சுவடியியல் பயிலரங்கை நடத்தி வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை மூன்று வார காலத்துக்குத் தமிழ் ஓலைச்சுவடிகளைப் படித்தறியும் விதமாக,  தமிழ்ச்சுவடியியல் பயிலரங்கை நடத்த உள்ளது.
இந்நூலகத்தில் பயிற்சி வழங்குவதன் நோக்கம், பதிப்பிக்கப்படாத தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பிக்கவும், பதிப்பிக்கப் பெற்ற நூல்களை மீளாய்வு செய்து புதிய கருத்துகளை வெளிக்கொண்டு வரவும் பயன்படும் விதத்தில் அமையும். மேலும், பனை ஓலைகளில் எழுதுவதற்குப் பயிற்சி வழங்கவும் உள்ளோம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உரிய பாடநூல், எழுதுபொருள்கள் போன்றவையும் வழங்கப்படும்.
தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களும்,  சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களும் மற்றும் ஜோதிடவியலில் பட்டம் பெற்றவர்களும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பயிற்சியில் சேரத் தேர்வு பெற்றவர்கள் ரூ. 100 (ரூபாய் நூறு) மட்டும் பதிவுக் கட்டணமாகப் பயிற்சி தொடங்கும் நாளில் செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்பு நாள்தோறும் காலை 10.30 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
இப்பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை நூலகத்தின் வேலை நாள்களில் வந்து பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் உறையின் மேல் தமிழ்ச்சுவடியியல் பயிற்சி வகுப்பு எனக் குறிப்பிட்டு,  இயக்குநர், சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர் - 613 009 என்ற முகவரிக்கு மே 31-ம் தேதிக்குள் நூலகத்துக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும். 
மேலும் கூடுதல் விவரம் பெற 04362-234107 என்ற நூலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com