தஞ்சாவூர்

2020-இல் உணவு சில்லறை விற்பனை ரூ.61 லட்சம் கோடியை எட்டும்: மத்திய இணை அமைச்சர் பேச்சு

29th Jun 2019 11:41 AM

ADVERTISEMENT

இந்தியா 2020 ஆம் ஆண்டில் உணவு சில்லறை விற்பனையில் ரூ. 61 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் மத்திய உணவு பதனத் தொழில்கள் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் தேலி.
தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவு பதப்படுத்துதலில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
உலக அளவில் உணவு தானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. உணவு சந்தையில் நாம் வளர்ந்து வரும் நிலையில்,  உணவு சில்லறை விற்பனையில் 2020 ஆம் ஆண்டில் ரூ. 61 லட்சம் கோடியை எட்டுவோம் என எதிர்பார்க்கப்படுகிறது. பால், வாழை, மாம்பழம், நறுமணப் பொருள்கள், இறால், பயறு வகைகள், சிறு தானியங்கள், காய்கறிகள், தேயிலை ஆகியவற்றில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளது.
அறுவடைக்குப் பிந்தைய இழப்பானது விநியோகத் துறையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் இழப்பு கணிசமாக தொடர்வது வருத்தமளிக்கிறது. அழுகாத விளைபொருள்களில் 3 முதல் 10 சதவீதமும், பாதி அழுகும் தன்மையுடைய பொருள்களான பால், மீன், மாமிசம், முட்டை ஆகியவற்றில் 10 முதல் 20 சதவீதமும், பழங்கள், காய்கறிகளில் 10 முதல் 20 சதவீதமும், தோட்டக்கலைப் பொருள்களில் 5 முதல் 16 சதவீதமும்  தோராய இழப்பாக உள்ளது. எனவே, உணவு உற்பத்திக்குப் பிறகு பதப்படுத்துதல், பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.
விவசாயிகளின் வறுமையை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவின் உணவு சந்தையில் உணவு பதப்படுத்துதலின் பங்களிப்பு 32 சதவீதமாக உள்ளது. உணவு பதப்படுத்துதல் மாறி வரும் சூழலில் ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள் வருவதால், அத்துறை விரிவடைந்து வருகிறது.
விவசாயிகளுக்கு உதவும் விதமாக மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் 42 மாபெரும் உணவு பூங்காக்களை அமைத்துள்ளது. மேலும், உணவு பதப்படுத்துதலுக்குச் சிறப்பு நிதி நிறுவனங்களின் மூலம் நிதியுதவி செய்யப்படுகிறது. விலைவாசி ஏற்றதாழ்வுகளைக்  கண்காணிப்பதற்குப் பசுமைத் திட்டங்கள் போன்ற புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 
வேளாண் நிறுவனங்களின் மூலம் விவசாயிகள் பயன் பெற சுமார் ரூ. 2,000 கோடி அளவுக்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் நவம்பர் 1ஆம் தேதி உலக உணவு மாநாடு நடத்தப்படவுள்ளது. விவசாயிகளின் விளைபொருள்களை வணிக ரீதியாகச் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துவதற்காக உலக வங்கியின் ரூ. 300 கோடி நிதியுதவியுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இந்தத் திட்டத்தில் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார் ராமேஷ்வர் தேலி. முன்னதாக,  இவர் இக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கணக்கீட்டு மாதிரியமைத்தல் மற்றும் நானோ அளவைச் செயலாக்கு மையத்தைத் திறந்துவைத்தார்.
இந்திய வேளாண் ஆய்வுக் குழுமத்தைச் சார்ந்த மத்திய மீன் வளத் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் சி.என். ரவிசங்கர் சிறப்புரையாற்றினார்.இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன் வரவேற்றார். முனைவர் எம். லோகநாதன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT