பாபநாசம் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள போலி மதுபான பாட்டில்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பாபநாசம் அருகே நல்லிச்சேரி காமராஜர் காலனியை சேர்ந்த கந்தையன் மகன் தனசேகரன் (50). இவர் அப்பகுதியில் போலி மதுபானங்களை விற்பனை செய்வதாக தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீஸார் நல்லிச்சேரி கிராமத்துக்கு சென்று அந்தப் பகுதியை கண்காணித்தனர். அப்போது, அந்த பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தனசேகரன் 71 அட்டை பெட்டிகளில் 3408 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் என தெரிகிறது. இவை போலி மதுபானங்கள் என்பதும் தெரிய வந்தது.
மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்த மூதாட்டியிடம் போலீஸார் விசாரித்தபோது, குடிநீர் பாட்டில்கள் எனக் கூறி தனசேகரன் வைத்துவிட்டு சென்றதாக கூறினார். இதையடுத்து, அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார் கும்பகோணம் மதுவிலக்கு தடுப்பு அமல் பிரிவு போலீஸாரிடம் அவற்றை ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக மதுவிலக்கு தடுப்பு அமல் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான தனசேகரனை தேடிவருகின்றனர்.