தஞ்சாவூர்

மோட்டார் சைக்கிள்களை திருடிய இளைஞர் கைது: 19 வாகனங்கள் பறிமுதல்

31st Jul 2019 09:59 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதாக இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இவரிடமிருந்து 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர் ரயிலடி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தெற்குஅலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அடிக்கடி நிகழ்ந்தது. 
இதைத் தடுக்கவும், இதுவரை திருட்டில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கவும் தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டார். இதன்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் மேற்பார்வையில், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். ரவிச்சந்திரன், ஆய்வாளர் செங்குட்டுவன், உதவி ஆய்வாளர் சுகுமாரன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ரயிலடி பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகப்படும்படியான நபர் நடந்து செல்வதும், அதே நபர் சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து, அந்த நபரின் புகைப்படங்கள் ரயிலடி, புதிய, பழைய பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் வழங்கப்பட்டு, இவரைப் பார்த்தால் தகவல் தெரிவிக்குமாறு தனிப்படையினர் கூறினர்.
இந்நிலையில், ஜூலை 26-ம் தேதி தஞ்சாவூர் ரயிலடி பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இளைஞர் திருட முயன்றதை ஆட்டோ ஓட்டுநர்கள் பார்த்தனர். 
மேலும், தனிப்படையினர் அளித்த புகைப்படத்தில் அந்த இளைஞர் இருந்ததால், அவரை ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் பிடித்து, தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் பட்டுக்கோட்டை அருகேயுள்ள செந்தலைப்பட்டினத்தைச் சேர்ந்த எம். ரகமத்துல்லா (35) என்பதும், மோட்டார் சைக்கிள்களை திருடுவதற்காகப் பல கள்ளச்சாவிகள் வைத்திருப்பதும், சென்னையில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் இவர் அடிக்கடி சொந்த ஊருக்கு வரும்போது தஞ்சாவூரில் மோட்டார் சைக்கிள்கள் திருடியிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, ரகமத்துல்லாவிடமிருந்து 19 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீஸார் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT