தஞ்சாவூர்

மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனை நாள் பேரணி

31st Jul 2019 10:03 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளையொட்டி, மருத்துவமனை நாள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர் தெரிவித்தது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகத் திகழ்ந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார். 
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினராகவும் பணியாற்றிய அவர் பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாகக் காரணமாக இருந்தார்.
அவரின் பிறந்த நாள் மருத்துவமனை தினமாகக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்பேரணி நடைபெற்றது என்றார் அவர்.
இப்பேரணி மருத்துவமனை முதன்மைக் கட்டடத்திலிருந்து பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் வரை நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், மருத்துவர்கள், மாணவ, மாணவிகள், செவிலியர்கள், செவிலிய மாணவர்கள் என 500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 

 

பேராவூரணி, பட்டுக்கோட்டையில்...
பேராவூரணி பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி  பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனை தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
பேராவூரணி  வட்டாரம் செருவாவிடுதி  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு  வட்டார மருத்துவ அலுவலர் வி. சௌந்தரராஜன்  தலைமை  வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட தேசிய சுகாதார நலக் குழுமத் திட்ட மேலாளர் டாக்டர் எட்வின் முன்னிலை வகித்தார். மருந்தாளுநர் சரவணன்  வரவேற்றார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார். இதேபோல காலகம் , பெருமகளூர், அழகியநாயகிபுரம் ,ஊமத்தநாடு  அரசு ஆரம்ப  சுகாதார நிலையங்களிலும் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது. 
பட்டுக்கோட்டையில்...
பட்டுக்கோட்டை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி,  பிக்மி அட்டைகள், அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன. நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரியங்கா தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொ) என். பாஸ்கர் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் அந்தோணி ஸ்டீபன், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும்  சுகாதார செவிலியர்கள், மருந்தாளுநர், துணை செவிலியர்கள், ஆய்வக நுட்புனர், மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT