நெடுஞ்சாலைத் துறைப் பராமரிப்புப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் கொள்கை முடிவைக் கைவிட வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைச் சாலைப் பணியாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறையை நீண்ட கால ஒப்பந்தத்தின்படி 5 ஆண்டுகளுக்குத் தனியார் நிறுவனத்திடம் வழங்குகிறது. பொள்ளாச்சி, ராமநாதபுரம், பழனி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய கோட்டங்களில் உள்ள மாநில, மாவட்ட முக்கியச் சாலைகளைத் தனியார் நிறுவனங்களுக்குப் பராமரிப்புப் பணிகளுக்காக 5 ஆண்டுகளுக்கு ரூ. 3,000 கோடியை கஜானாவில் உள்ள பணத்தை அரசு வழங்கியுள்ளது. இந்தச் சாலைகளைச் சாலைப் பணியாளர்களைக் கொண்டு அரசே பராமரித்தால் ரூ. 1,000 கோடியில் முடியும். தனியார் நிறுவனங்கள் ரூ. 2,000 கோடிக்கும் அதிகமாக லாபம் ஈட்ட அரசு வழிவகை செய்துள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறைப் பராமரிப்புப் பணியைத் தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவைக் கைவிட வேண்டும். தஞ்சாவூர் நெடுஞ்சாலை கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டச் சாலைகளைத் தனியார் பராமரிப்பு முடிவைக் கைவிட்டு, சாலை பராமரிப்புப் பணியைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. சந்திரசேனன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வி. தம்பிஅய்யா, நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலர் ஏ. ரெங்கசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் ஆர். பன்னீர்செல்வம், மாநிலத் துணைத் தலைவர் பி. கோதண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.