தஞ்சாவூர்

மாவட்டத் தலைமையிடங்களில் அரசு முதியோர் இல்லம் தேவை

29th Jul 2019 10:45 AM

ADVERTISEMENT

 மாவட்டத் தலைமையிடங்களில் அரசு சார்பில் முதியோர் இல்லம் அமைக்கப்பட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட மூத்தக் குடிமக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இப்பேரவையின் 33 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதியோர் தினத்தை ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்த வேண்டும். மாவட்டத் தலைமையிடங்களில் அரசு சார்பில் முதியோர் இல்லங்களை ஏற்படுத்தி முதியோரைப் பராமரிக்க வேண்டும். மூத்தக் குடிமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் பயணக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பு நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக இந்த அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ஒரு விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற பெயரை திருவள்ளுவர் கோட்டை என மாற்ற வேண்டும். கல்வித் துறையில் இதுவரை இருந்து வந்த இரு மொழிக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையின் தலைவர் ஆதி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். உறுப்பினர்களில் 75 வயது நிறைவடைந்தவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கும், 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற உறுப்பினர்களின் பேரன், பேத்திகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. 
பேரவைச் செயலர் அக்ரி மு. செல்வராஜ், பொருளாளர் அரிமா செல்வராஜ், செஞ்சிலுவை சங்க அமைப்புச் செயலர் சா. ராசமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT