பேராவூரணி பகுதியில் பல்வேறு இடங்களில் கார்கில் போர் வெற்றி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்ற கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் அ. கருணாநிதி தலைமை வகித்தார். நகர வர்த்தகர் கழகத் தலைவரும், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளருமான ஆர்.பி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் சத்தியநாதன் தலைமையில், என்.சி.சி மாணவர்கள், கார்கில் போரின்போது உயிர்நீத்த படை வீரர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் .
நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் கே.சோழபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், பேராவூரணி தென்னை சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், உடையநாடு- வீரியன்கோட்டை ராஜராஜன் பள்ளியில் நடைபெற்ற கார்கில் வெற்றி தின நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் ஆர். மனோன்மணி ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.
லயன்ஸ் சங்க தலைவர் எம். நீலகண்டன், செயலாளர் வி. ஜெய்சங்கர், பொருளாளர் எஸ். மைதீன் பிச்சை, சங்க நிர்வாக அலுவலர் ஜெ.பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கார்கில் போரின்போது உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.