ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசுக் கூறுவதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
தஞ்சாவூரில் புதன்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு கூறுகிறது. இதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கெனவே நீட் தேர்வில் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறிய அவர்கள் அனுமதித்துவிட்டனர். இதற்கெல்லாம் தேர்தல் வரும்போது தமிழ்நாட்டு மக்கள் பதிலளிப்பர்.
அமமுகவை பதிவு செய்து கொண்டிருக்கிறோம். பதிவு முடிந்தபிறகு தேர்தலை சந்திப்போம். சொந்த காரணத்துக்காகச் சுயநலத்துடன் சென்றவர்களை எங்களால் தடுக்க முடியாது. உண்மையான தொண்டர்கள், உண்மையான நிர்வாகிகள் எங்களுடன் தொடர்ந்து பயணிப்பர். அமமுக மாபெரும் சக்தி. சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர சட்ட ரீதியான முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நிச்சயம் வெளியே வருவார் என்றார் தினகரன்.