ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்.ஐ.சி) முதல்நிலை அலுவலர்கள் பதவி உயர்வில் முழுமையான அளவில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என எல்.ஐ.சி., எஸ்.சி., எஸ்.டி. பெளத்த ஊழியர்கள், அலுவலர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் கோட்டப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எல்.ஐ.சி.யில் முதல்நிலை அலுவலர்கள் பதவி உயர்வில் முழுமையான அளவில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பதவி உயர்வுக்கான பின்னடைவு காலியிடங்களை நிரப்பிடும் மத்திய அரசின் ஆணையை எல்.ஐ.சி. நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
எல்.ஐ.சி.யில் பல ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணியாற்றும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் அகில இந்தியச் செயலர் ஜி. ராம்குமார், தென் மண்டல அமைப்புச் செயலர் ஏ. பாண்டி, பொதுச் செயலர் வி. சுவாமிநாதன், கோட்டப் பொதுச் செயலர் என். இளங்கோவன், செயலர் கே. சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.