தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில், மூன்று வாரக் கால தெலுங்கு மொழிப் பயிற்சி வகுப்பு ஆக. 2-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், நூலக இயக்குநருமான (பொறுப்பு) ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் தெலுங்கு மொழிச் சுவடிகளும், தெலுங்கு எழுத்தில் எழுதப்பட்ட மராட்டி, சம்ஸ்கிருத சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழகத்தில் தெலுங்கு மொழியைக் கற்பிக்கும் நிறுவனங்கள் அதிகமாக இல்லாததால் இம்மொழியைக் கற்க இயலாத நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் நிதியுதவியுடன் ஆக. 2 முதல் 22-ஆம் தேதி வரை மூன்று வாரக் கால தெலுங்கு மொழிப் பயிற்சி வகுப்பு தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் நடத்தப்படவுள்ளது.
இதில், கலையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். பயிற்சிப் பதிவு கட்டணமாக ரூ. 100-ஐ பயிற்சி தொடங்கும் நாளில் செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்புகள் நாள்தோறும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது சுய விவரங்களை எழுதி, இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் - 9 என்ற முகவரிக்கு ஜூலை 25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9176312896 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.