திருச்சி அருங்காட்சியகத்தில் 31 சிலைகள் திருட்டு வழக்குத் தொடர்பாக, நேபாள எல்லையில் கைதான இளைஞரை காவலில் வைக்க நீதிபதி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் 31 பழங்கால சிலைகள் 2009 ஆம் ஆண்டில் திருட்டு போனது. இதுதொடர்பாக காரைக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் (47), ஆனந்தன் (44), சிவா (47), சிவசிதம்பரம் (40) ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். மேலும், சிலரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், நேபாள எல்லையான சோனாலி பகுதியில், காரைக்குடி அருகேயுள்ள பட்டினம்பட்டியைச் சேர்ந்த கே. ராம்குமாரை (36) சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, இவர் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இவரை ஜூலை 26- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் ராம்குமார் அடைக்கப்பட்டார்.