தஞ்சாவூர்

காமராஜர் பிறந்த நாளை மறைக்க அரசு நடவடிக்கை

15th Jul 2019 08:42 AM

ADVERTISEMENT

பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாளை மறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் தெரிவித்தது:
காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியன்று கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என திமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, சட்டமாக இயற்றப்பட்டது. அது, செயல்படுத்தப்பட்டும் வந்தது. 
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நேரு கொண்டு வந்த திட்டங்களைச் சீர்குலைப்பது, நேருவின் புகழுக்குக் களங்கம் கற்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசும், அக்கட்சியும் ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஜூலை 15-ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாள் என்பதை மாற்றி, மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் நீர்ப் பாதுகாப்பு - மழை நீர் சேகரிப்பு - மாணவர்களின் பங்களிப்பு என்ற விழிப்புணர்வு இயக்கம் நடத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் மாநிலப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 காமராஜருடைய பெயரை மறைத்துவிட்டு, அதற்கு மாறாக வேறு விதமாக  விழிப்புணர்வு இயக்கம் நடத்த வேண்டும் என மத்திய அரசின் உத்தரவின்படி மாநில அரசுச் செயல்படுகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. இதைத் திரும்பப் பெற்று காமராஜருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும்.
 நீர்ப் பாதுகாப்பு இயக்கம் நடத்துவதற்கு எவ்வளவோ நாள்கள் இருக்கும் நிலையில், அதில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து நடத்தலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே குடும்ப அட்டை, ஒரே கல்விக் கொள்கை, ஒரே ஆட்சி என்ற சர்வாதிகார போக்கு மிகவும் அபாயகரமானது. இது, தேசத்துக்கும் ஆபத்தானது. 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் போர்க்களம் போல காணப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில் ஜூலை 30-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். 
டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு ஒரு போக சாகுபடிக்காவது காவிரி நீரைப் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முத்தரசன்.
அப்போது, அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா. திருஞானம், சி. சந்திரகுமார், மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, மாநகரச் செயலர் ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT