தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, பலத்தக் காயமடைந்ததில் உயிரிழந்தார்.
செங்கிப்பட்டி அருகே உள்ள காத்தாடிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் ராஜன் (14). கண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராஜா தனது தாய் சித்ரா மற்றும் இரு சகோதரிகளுடன் காத்தாடிப்பட்டியில் வசித்து வந்தார். இவர் செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற இவர் மீண்டும் மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் பலத்தக் காற்றுடன் லேசான மழை தூறியது. வழியில் மக்கள் வசிக்காத பாழடைந்த வீடுகள் உள்ளன. இந்த வீடுகளைக் கடந்து சென்று கொண்டிருந்த ராஜன் மீது காற்றின் வேகத்தால் ஒரு வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில், பலத்தக் காயமடைந்த ராஜன் காத்தாடிப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், காயமடைந்த ராஜன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இச்சம்பவம் குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.