தஞ்சாவூர்

ஹைட்ரோ கார்பனுக்கு தடை குறித்து  முதல்வர் அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

4th Jul 2019 09:11 AM

ADVERTISEMENT

ஹைட்ரோ கார்பனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேசிய அமைச்சர் சி.வி. சண்முகத்தின் பேச்சு உண்மையா என்பது குறித்து,  முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பேசியதற்கு விடையளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதுபற்றி திறந்த மனதுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம் என்றும், மக்கள் கருத்தறிந்து செயல்படுவோம் எனவும் கூறினார். 
ஆனால், அடுத்த 2 நாள்களில், மூன்றாவது கட்டமாக மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கத் திறந்தவெளி உரிமம் வழங்கும் திட்டத்தின் கீழ், புதன்கிழமை விடப்பட்ட ஏலத்தில் நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 459.89 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஓ.என்.ஜி.சி.க்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் இன்னொரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403.41 சதுர கிலோ மீட்டர் ஓ.என்.ஜி.சி.க்கு ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
அதே வேளையில் தமிழக சட்டப்பேரவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என பேசிய திமுகவினருக்கு விடையளித்த சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.
அமைச்சரின் இக்கூற்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான முடிவு என்றால், ஏற்கெனவே இரு கட்டத்தில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கும், வேதாந்தாவுக்கும் விடப்பட்ட ஏலத்தையும், புதன்கிழமை மூன்றாவது கட்டமாக ஓ.என்.ஜி.சி.க்கு விடப்பட்ட ஏலத்தையும் தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என  அரசு சார்பில் முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அமைச்சர்களும், தமிழக அமைச்சர்களும் கூட்டாகப் பேசிக் கொண்டு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்வதுபோல் மாறுவேடம் போடும் சூழ்ச்சியாகவே இது அமையும் என மணியரசன் தெரிவித்துள்ளார்.
 தமிழக அரசுக்கு நன்றி: தமிழகச் சட்டப்பேரவையில் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என கொடுத்த வாக்குறுதிக்குப் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேரியக்க நிறுவனத் தலைவர் க.கா.இரா. லெனின் மேலும் தெரிவித்திருப்பது: இதுபோன்ற திட்டங்கள் இப்பகுதியில் செயல்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மக்களுக்கும், இந்த மண்ணுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவிரி பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். 
இதை நிகழ் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அறிவித்து, சிறப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதைச் சட்டமாக்க வேண்டும். இதுதான் இந்தப் பாதகத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும். இந்த காவிரிப் பாசனப் பகுதி மக்களின் பயத்தைப் போக்கும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT