தஞ்சாவூர்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாநாடு ஆக. 15-இல் தொடக்கம்

4th Jul 2019 09:10 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாடு தஞ்சாவூரில் ஆக. 15-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து இந்த முன்னணியின் மாநிலத் தலைவர்  பி. சம்பத் புதன்கிழமை மாலை மேலும் தெரிவித்தது:
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  மாநில  மாநாடு தஞ்சாவூரில் ஆக. 15 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  ஆக. 17-ஆம் தேதி மாலை சாதி ஒழிப்புப் பேரணியும், பின்னர் திலகர் திடலில் பொதுக்கூட்டமும் நடத்தப்படவுள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ஏராளமான தலித் அமைப்புகளை இணைத்து போராடுகிறோம். அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இக்காலத்திலும் சாதி ஒடுக்கு முறை நிலவுகிறது. தலித் மக்கள் இழிவுக்கும், அவமானத்துக்கும் உள்ளாகின்றனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருப்படியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 
 தமிழகத்தில்  ஜாதி ஒழிப்பு, ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இம்மாநாடு நடத்தப்படுகிறது. இதில், ஜனநாயக சக்திகளையும், அக்கறை, ஆர்வம் உள்ளவர்களையும் ஒருங்கிணைத்து சாதி ஒழிப்பு இயக்கத்துக்குத் திட்டமிடப்படவுள்ளது. குறிப்பாக, அடுத்தக் கட்டப் பணிகள் குறித்து இம்மாநாட்டில் முடிவு செய்யப்படவுள்ளது. 
ஆணவ கொலைக்கு எதிராக தற்போதுள்ள சட்டம் சாதாரணமாக உள்ளது. இது போதுமானதல்ல என்பதால், தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார் சம்பத். பேட்டியின் போது, மாநிலப் பொதுச் செயலர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன், மாவட்டத் தலைவர் கே. அபிமன்னன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT