தஞ்சாவூர்

"சில்லறை வர்த்தகக் கொள்கைகளை உருவாக்கினால் வணிக மாற்றம் ஏற்படும்'

2nd Jul 2019 09:33 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மாநில அளவில் சில்லறை வர்த்தக கொள்கைகளை உருவாக்கினால் வணிக மாற்றத்தை உருவாக்க முடியும் என்றார் இந்திய சில்லறை விற்பனையாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் குமார் ராஜகோபாலன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சில்லறை வணிகத்தின் போக்கை பெரிதும் மாற்றி உள்ளது. அதனால் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. போட்டி அதிகரித்திருக்கின்றன. வாடிக்கையாளர்களும் பயனடைகின்றனர். இதுபோன்ற விஷயங்களை வணிகர்களுக்கு எடுத்துச் சொல்ல தொழில் வர்த்தக சங்கம் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்திய அளவில் சில்லறை வர்த்தகக் கொள்கைகளை உருவாக்க முயற்சி செய்தோம். அதில் சரியான இலக்கு எட்டப்படவில்லை. இதையடுத்து மாநில அளவில் இந்தக் கொள்கைகளை உருவாக்க முயற்சி செய்தோம். அதன்படி, மகாராஷ்டிரம், ஆந்திரம், ஹரியாணா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இதில், தமிழகமும் விரைவில் இணைந்து பயனடைய வேண்டும். அப்படி செய்தால், ஒரு நல்ல வணிக மாற்றத்தை உருவாக்க முடியும்.
ஒரு சில்லறை நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டுமானால், 48 விதமான உரிமங்கள் பெற வேண்டும். இதை எளிமையாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 40 சதவீத பெண்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், சில்லறை வணிகத்தில் 12 சதவீதம் பேர்தான் ஈடுபடுகின்றனர். எனவே, சில்லறை வணிகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்தால் அதிக அளவில் ஈடுபடுவர். எனவே, பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். இதன் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
நம் நாட்டின் சில்லறை வணிகத்தின் வளர்ச்சி 15 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் 40 சதவீதமாக இருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தால்  சில்லறை வணிகத்தில் பாதிப்புகள் இல்லை. எனவே, சில்லறை வணிகத்தில் நவீன யுக்திகளை கையாள வேண்டும் என்றார் குமார் ராஜகோபாலன்.
பின்னர், தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் விற்பனையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குமார் ராஜகோபாலன், தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.பி.எஸ். அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT