தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே வாக்குச் சீட்டுகள் மாறியதால் தேர்தல் நிறுத்தம்

27th Dec 2019 05:17 PM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே வாக்குச் சீட்டுகள் மாறியதால் இரு வார்டுகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மங்குடி ஊராட்சிக்கான தேர்தல் அப்பகுதியில் உள்ள உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இதற்காக இப்பள்ளியில் 6 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில், வாக்கு சாவடி எண் 203-இல் செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட 8 மற்றும் 9-வது வார்டுகளுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 

இதில், எட்டாவது வார்டில் 5 பேரும், ஒன்பதாவது வார்டில் 4 பேரும் போட்டியிடுகின்றனர்.எட்டாவது வார்டில் 243 பேரும், ஒன்பதாவது வார்டில் 321 பேரும் உள்ளனர். இவர்களில் பிற்பகல் 2 மணி வரை எட்டாவது வார்டில் 91 வாக்குகளும், ஒன்பதாவது வார்டில் 85 பேரும் வாக்குப் பதிவு செய்தனர்.

ADVERTISEMENT

அதுவரை எட்டாவது வார்டுக்கான வாக்கு சீட்டுகளை ஒன்பதாவது வார்டு வாக்காளர்களுக்கும், ஒன்பதாவது வார்டு வாக்குச் சீட்டுகளை எட்டாவது வார்டு வாக்காளர்களுக்கும் மாற்றி வழங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்தத் தகவல் பிற்பகல் 2 மணிக்கு பிறகு வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து மண்டல தேர்தல் அலுவலர் பத்மநாபனிடம் முறையிட்டு, தேர்தலை நிறுத்துமாறும் முறையிட்டனர். 

தகவலறிந்த திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன், வட்டாட்சியர்கள் சிவக்குமார், பாலசுப்பிரமணியன், தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் உள்ளிட்டோர் தொடர்புடைய வாக்குச் சாவடிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, வாக்குப் பதிவு நிறுத்தப்படுவதாகவும், மீண்டும் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் நாளான டிச. 30-ம் தேதியன்று, இந்த இரு வார்டுகளுக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்படும் எனவும் அலுவலர்கள் அறிவித்தனர்.

என்றாலும், இதே வாக்குச் சாவடியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT