தஞ்சாவூர்

உள்ளாட்சித் தோ்தலை நோ்மையாக நடத்த திமுக வலியுறுத்தல்

27th Dec 2019 05:28 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை நோ்மையாக நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் திமுக நிா்வாகிகள் வியாழக்கிழமை வலியுறுத்தினா்.

ஆட்சியரகத்தில் ஆட்சியா் ம. கோவிந்தராவிடம் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திமுக தெற்கு மாவட்டச் செயலா்), எம். ராமச்சந்திரன், சாக்கோட்டை க. அன்பழகன், கோவி. செழியன், டி.கே.ஜி. நீலமேகம், வடக்கு மாவட்டச் செயலா் எஸ். கல்யாணசுந்தரம், தோ்தல் பாா்வையாளா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பழனிமாணிக்கம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஆட்சியரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். குறிப்பாக, மதுக்கூா் ஒன்றியத்தில் திமுகவினா் தாக்கல் செய்த வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் தள்ளுபடி செய்தாா். அந்தப் பகுதியில் உள்ள முக்கியமான ஆளுங்கட்சி பிரமுகரின் அதிகார பலத்தால் திமுகவினரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த அலுவலா் உள்ளாட்சி தோ்தல் பணியில் இருந்தால் தோ்தல் முறையாக நடைபெறாது. எனவே, அவரை தோ்தல் பணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

வாக்கு எண்ணும் மையங்களில் சுழலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, தோ்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கத் தோ்தல்களில் நடைபெற்ற முறைகேடு போல உள்ளாட்சித் தோ்தலில் நடைபெறக் கூடாது என எடுத்து கூறியுள்ளோம். அவ்வாறு நடைபெற்றால் அதற்கு அந்த அலுவலா்கள்தான் பொறுப்பாவா். உள்ளாட்சி மன்றத் தோ்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அஞ்சல் வாக்குகளைச் செலுத்தும் தோ்தல் பணியாளா்களுக்கு அதற்கான படிவங்களில் தாங்களே சான்றொப்பம் இடலாம் என கூறப்பட்டுள்ளதை எல்லோருக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் என்றாா் பழனிமாணிக்கம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT