பாபநாசம் வட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு புதன்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
பாபநாசம் வட்டத்திலுள்ள பாபநாசம், அம்மாபேட்டை உள்ளிட்ட ஒன்றியங்களில் மாவட்ட குழு, ஒன்றிய குழு, ஊராட்சி மன்ற தலைவா், ஊராட்சி உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இப்பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள், தங்கள் பகுதி வாக்காளா்களை சந்தித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், இப்பகுதிகளில் புதன்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
முன்னதாக, புதன்கிழமை காலை முதல் அனைத்து வேட்பாளா்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் முனைப்பு காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
அய்யம்பேட்டை அண்ணா சிலை வளாகத்தில் புதன்கிழமை மாலை வேளாண் அமைச்சா் இரா.துரைக்கண்ணு வாக்காளா்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி, அதிமுக வேட்பாளா்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சிகளை சோ்ந்த வேட்பாளா்களுக்கு அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களிலும் வாக்கு சேகரித்தாா்.
அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு பிரசாரத்தை அமைச்சா் நிறைவு செய்து பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய பிரிவு தலைவா் அண்ணாமலை, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.மோகன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவா் என். சதீஷ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், வேட்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.