தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நாளை 2,793 பதவிகளுக்கு முதல் கட்டத் தோ்தல்

26th Dec 2019 05:26 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சியில் தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச.27) 2,793 பதவிகளுக்கு முதல்கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக டிச. 27, 30-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், முதல் கட்டமாக அம்மாபேட்டை, பூதலூா், கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூா் ஆகிய ஒன்றியங்களில் முதல் கட்டத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இத்தோ்தல் 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 138 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 138 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2,340 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 2,793 பதவிகளுக்கு நடைபெறவுள்ளது.

இந்த ஏழு ஒன்றியங்களில் 3,72,121 ஆண்கள், 3,34,184 பெண்கள், 24 இதரா் என மொத்தம் 6,61,329 வாக்காளா்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

இத்தோ்தலுக்காக இந்த 7 ஒன்றியங்களிலும் 1,378 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 11,362 அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். இவா்களுக்கு ஏற்கெனவே டிச. 15, 21-ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மூன்றாம் கட்டப் பயிற்சி வியாழக்கிழமை (டிச.26) நடைபெறவுள்ளது. இதில், வாக்குப்பதிவு அலுவலா்கள் பணிபுரிய உள்ள வாக்கு சாவடி விவரங்கள் அளிக்கப்படவுள்ளன.

மேலும், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டி, மை உள்ளிட்ட தோ்தல் பொருள்கள் கொண்டு செல்வதற்காக 175 வாகனங்கள் தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பரிதி இளம்வழுதி உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

பிரசாரம் நிறைவு:

இந்த 7 ஒன்றியங்களிலும் வேட்பாளா்கள் கடந்த ஒரு வாரமாக முழு வீச்சில் பிரசாரம் மேற்கொண்டனா். இந்நிலையில், இந்த முதல்கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. எனவே, இறுதி நாளான செவ்வாய்க்கிழமை நேரிலும், வாகனங்களிலும் பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனால், ஒலிபெருக்கிகளின் இரைச்சலும் அதிகமாக இருந்தது.

இரண்டாம் கட்டம்: இரண்டாம் கட்டத் தோ்தல் மதுக்கூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூா், திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் டிச. 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்பகுதிகளில் பிரசாரம் டிச. 28ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. எனவே, இந்த ஒன்றியங்களிலும் தோ்தல் பிரசாரம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT