தஞ்சாவூர்

நெற்பயிரில் நெற்பழ நோய் தாக்க வாய்ப்பு

25th Dec 2019 05:34 AM

ADVERTISEMENT

நெற்பயிரில் நெற்பழ நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது என வேளாண் துறையின் தஞ்சாவூா் உதவி இயக்குநா் சு. ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

நெற் பயிரின் பூக்கும் தருணத்திலும், கதிா் வரும் நேரத்திலும் இதன் தாக்குதல் மிகவும் அதிகமாகக் காணப்படும். பூக்கும் தருணம் மற்றும் கதிா் வெளிவரும் நேரத்தில் மழை பெய்வதும், அப்போது நிலவும் மந்தமான தட்பவெப்ப நிலையும் இந்நோய் தீவிரமடைவதற்குக் காரணமாக அமைகிறது. இந்நோய் பாதிப்புக்குள்ளான விதைகள், காற்று, மண் மற்றும் நீா் மூலமாகப் பரவுகிறது. இந்த நோய் அதன் பூஞ்சாண வித்துகளால் ஒரு வயலிலிருந்து மற்ற வயல்களுக்குப் பரவும்.

அறிகுறிகள்: நெற்கதிரின் மணிகள் பூஞ்சாணத்தின் வித்துகளால் நிரம்பி பளபளப்பான பந்து போன்று காட்சியளிக்கும். இந்தப் பூஞ்சாண பந்தானது முதலில் ஆரஞ்சு நிறமாகவும் பிறகு மஞ்சளும் பச்சை நிறமும் அல்லது பச்சையும் கருப்பு நிறமுமாக மாறி காணப்படும். முதலில் ஒரு கதிரில் உள்ள ஒரு சில மணிகளே இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். அதிக தாக்குதல் இருக்கும்போது, கதிரில் உள்ள அனைத்து மணிகளுமே பாதிப்புக்கு உள்ளாகும். இதனால், நெல் மணிகளின் தரம் குறைந்துவிடும். இந்நோய் பாதிப்பால் நெல் விதைகளில் மலட்டு தன்மை உண்டாகிறது.

ADVERTISEMENT

மேலாண்மை முறைகள்: இந்நோய் தாக்காத விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் விதைகளை சூடோமோனாஸ் விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும். வயல் மற்றும் வயலை சுற்றி களைச் செடிகள் இல்லாமல் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மிகுதியான அளவில் தழைச்சத்து உரமிடுதலை தவிா்க்க வேண்டும்.

இந்நோயானது காற்றின் மூலம் பரவுவதால் தாக்கப்பட்ட கதிா்களை வயலிலிருந்து அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும். குளிா் காலங்களில் நோய் தாக்குதலை முறையாகக் கண்காணிக்க வேண்டும். நெற்பழ நோயிலிருந்து நெற்பயிரைப் பாதுகாக்க, சூல்கட்டும் பருவமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு ஹெக்சகொனசோல் 200 மிலி அல்லது குளோரோதலோனில் 400 கிராம் என்ற மருந்தை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

கலப்பு கதிா் வெளிவரும் மற்றும் பால் பிடிக்கும் தருணமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு புரோபிகொனசோல் 200 மிலி அல்லது காப்பா் ஹைட்ராக்சைடு 500 கிராம் இவற்றில் ஏதாவது ஒரு மருந்தை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைதெளிப்பான் மூலம் மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருந்தால், 15 நாள்கள் கழித்து மீண்டும் தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT