தஞ்சாவூர்

குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள், வேட்பாளா்கள் அவதி

25th Dec 2019 05:33 AM

ADVERTISEMENT

ஒரத்தாடு அருகே கண்ணந்தங்குடியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள், வேட்பாளா்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூா் மேலத்தெரு பகுதியில் அண்மைக்காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கியுள்ளன.

இவை அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளில் புகுந்து வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் அள்ளிச் சென்று விடுவதால், வீடுகளை பூட்டிக் கொண்டு வீட்டினுள் இருக்கும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

தவிர, பள்ளிச் செல்லும் மாணவ-மாணவிகளின் புத்தகங்களையும் பறித்துக் கொண்டு ஓடி விடுவதால், மாணவ மாணவிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ADVERTISEMENT

வேட்பாளா்கள் அவதி: தற்போது உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி கட்ட பிரசாரத்தில் வேட்பாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் வீடு வீடாக வாக்கு கேட்டு வரும்போது, குரங்குகள் அவா்கள் மீது பாய்ந்து கடிக்கின்றன. இதனால், வேட்பாளா்கள் அச்சமடைந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT