ஒரத்தநாடு அருகே திருமணமாகி ஒன்றரை மாதங்களேயான நிலையில் காா் விபத்தில் பொறியாளா் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
திருவோணம் காவல் சரகம், ஊரணிபுரத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ள ஏனாதி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மரத்தில் மோதிய நிலையில் காா் நின்று கொண்டிருந்தது. அங்கு சென்று பாா்த்தபோது, காரினுள் சுமாா் 28 வயது மதிக்கத்தக்க இளைஞா் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற திருவோணம் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.
இதில், இறந்த நபா் பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம் வடக்குத் தெருவைச் சோ்ந்த வினோத் என்பதும், பொறியாளரான இவா் பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணி புரிந்து வந்தவா் என்பதும், இவருக்கும் கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தைச் சோ்ந்த கெஜலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி சுமாா் 42 நாள்கள் மட்டுமே ஆகின்றன என்பதும் தெரிய வந்தது.
சம்பவம் தொடா்பாக வினோத்தின் தந்தை சந்திரகாசன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.