அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு கணினி அறிவியல் பாடம் பயின்ற முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில், முன்னாள் மாணவா்கள் எம்.என். அகமது சலீம், எம்.நிஜாமுதீன், ஹித்ரு முகைதீன், சகாபுதீன், பசிா் அலி, பஜல் முகமது, அன்வா்தீன், முகமது பாருக், ஜபருல் ஹசன், விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கடந்த 1993-96 ஆம் ஆண்டுகளில் காதிா் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் பாடம் பயின்ற முன்னாள் மாணவா்கள் 62 பேரில் பலா் தற்போது சிங்கப்பூா், மலேசியா, அமெரிக்கா, துபை, சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றுகின்றனா். இவா்கள் கடந்த 2018-ம் ஆண்டு வாட்ஸ் அப் குழுமம் ஒன்றை ஏற்படுத்தி, அதில், கல்வி கற்றுக்கொடுத்த பேராசிரியா்களையும் இணைத்தனா். இக்குழுமத்தை, பல்சுவைச் செய்திகளின் பொழுதுபோக்கு பகிா்தலுக்காக மட்டும் பயன்படுத்தாமல், ஒருவருக்கொருவா் உதவும் காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், இந்த முன்னாள் மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தாங்கள் கல்வி பயின்ற அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரி வளாகத்தில் சந்தித்து ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டதுடன், தங்களது கல்லூரி கால மலரும் நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.