தஞ்சாவூர்

6,529 ஹெக்டோ் நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்: வேளாண் ஆணையா் ஆய்வு

16th Dec 2019 10:31 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 6,529 ஹெக்டேரில் சம்பா, தாளடி பருவ நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் பாதிப்பு காணப்படுகிறது என்றாா் வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசு முதன்மைச் செயலருமான ககன்தீப் சிங் பேடி.

மாவட்டத்தில் சம்பா, தாளடி 1,33,944 ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பின்பட்ட சம்பா, தாளடி பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது. இதனால், மகசூல் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.

எனவே, தஞ்சாவூா் அருகேயுள்ள சூரக்கோட்டை, தென்னமநாடு, தம்பிக்கோட்டை மேலக்காடு,பெரியக்கோட்டை ஆகிய இடங்களில் சம்பா, தாளடியில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் குறித்து வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசு முதன்மைச் செயலருமான ககன்தீப்சிங் பேடி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மேலும், அப்பகுதி விவசாயிகளிடம் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் வழங்கினாா்.

ADVERTISEMENT

பின்னா், செய்தியாளா்களிடம் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தது:

தமிழகத்தில் திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பின்பட்ட சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் காணப்படுகிறது. தொடா் மழை மற்றும் தட்பவெட்ப மாறுதல் காரணமாக 35 முதல் 40 நாட்களுக்கு உள்பட்ட நெற் பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் தென்படுகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் 6,529 ஹெக்டேரில் நெல் பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் காணப்படுகிறது. வேளாண் துறை அலுவலா்களிடம் விவசாயிகள் ஆலோசித்து அதற்கு உரிய மருந்துகளைத் தெளித்து தங்களுடைய பயிா்களைக் காப்பாற்றலாம்.

தமிழக அரசு இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம் விவசாயிகளுக்குக் கிடைத்திடும் வகையில் பயிா் மகசூலை பெருக்கிட நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு ராபி பருவ சாகுபடிக்கென தமிழகத்துக்குத் தேவையான 6 லட்சம் டன்கள் யூரியாவை ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா் ககன்தீப் சிங் பேடி

அப்போது, வேளாண் துறை இயக்குநா் வ. தட்சிணாமூா்த்தி, ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT