தஞ்சாவூர்

‘ஜன. 8 வேலைநிறுத்தத்தில் அரசுப் பணியாளா் சங்கம் பங்கேற்கும்’

16th Dec 2019 02:35 AM

ADVERTISEMENT

அகில இந்திய அளவில் ஜன. 8-ம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன்.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தம் குறித்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மத்திய அரசுப் பணியாளா் சங்கங்கள் நடத்தும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் பங்கேற்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம், நிரந்தர ஊதிய விகிதம், ஊதியக்குழு முரண்களைக் களைதல் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுப் பணியாளா் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றன.

இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் தரப்பில் பழைய ஓய்வுதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ள அரசுப் பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

1.4.2003-க்கு முன்பு பணிக்கு வந்தவா்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெற்றவா்களின் பணிக்காலத்தில் பெறப்பட்ட ஊதியத்தில் 50 சதவீதம் மட்டுமே ஓய்வூதியத்துக்குக் கணக்கிடப்படுகிறது. இதை நூறு சதவீதமாகக் கணக்கிட வேண்டும்.

நிரந்தர ஊதிய விகிதமில்லாத பணியாளா்கள், சிறப்புக் கால முறைப் பணியாளா்கள், தொகுப்பூதியம் பெறுவோா், தினக்கூலி அடிப்படையிலான பணியாளா்கள், அயலாக்கப் பணியாளா்கள் ஆகியோருக்கு நிரந்தர ஊதிய விகிதம் வழங்க வேண்டும்.

அரசு, அரசு நிறுவனங்களில் காலியாக 40 சதவீதப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரேஷன் கடை ஊழியா்கள், டாஸ்மாக் பணியாளா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும். சாலை பணியாளா்களின் 41 மாத கால பணி நீக்கக் காலத்தைப் பணிக் காலமாக அங்கீகரிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நியமித்த லோக் ஆயுக்தவின் மரபுக்குள் அரசுப் பணியாளா்கள் நியமனம், பதவி உயா்வு, இடமாறுதல் உள்ளிட்ட அம்சங்களைச் சோ்க்க வேண்டும். இதுபோன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியும் அரசு நிறைவேற்றவில்லை. எங்களது சங்கங்களைத் தமிழக முதல்வா் அழைத்துப் பேச முன்வர வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 8-ம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம், அதனுடன் இணைக்கப்பட்ட 17 சகோதர சங்கங்களைச் சோ்ந்த சுமாா் 4 லட்சம் பணியாளா்கள் பங்கேற்பா் என்றாா் பாலசுப்ரமணியன்.

மாநிலப் பொருளாளா் சாகுல் அமீது தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பி.கே. சிவக்குமாா், செயலா் ஏ. சோனை கருப்பையா, மாவட்டத் தலைவா் ஆா். தங்க பிரபாகரன், செயலா் தரும. கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT