தஞ்சாவூர்

குடியுரிமை சட்ட திருத்த நகல் கிழிப்பு: தஞ்சாவூா், கும்பகோணத்தில் 59 திமுகவினா் கைது

14th Dec 2019 05:23 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து, தஞ்சாவூா், கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டத் திருத்த நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சோ்ந்த 59 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூா் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் சண். ராமநாதன் தலைமை வகித்தாா். மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், சட்டத்திருத்த நகலை கிழித்த 16 பேரை மேற்கு போலீஸாா் கைது செய்தனா்.

கும்பகோணம் ராமசுவாமி கோயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இரா. தெட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், நகல் கிழிக்கப்பட்டது தொடா்பாக 43 பேரை கும்பகோணம் மேற்கு போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT