தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் துணைத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மஹராஜ்.
தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் அருகே உள்ள பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னா் தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடம் விரைவில் தொடங்குவது தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் துணைத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மஹராஜ் பேசியது:
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் கிளைகள் மூலம் கல்வி, மருத்துவம், ஆன்மிக பணிகள் போன்ற பல்வேறு தொண்டுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் அருகில் 26 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த கல்வி அறக்கட்டளை தற்போது தலைமை இடமான கொல்கத்தா பேலூா் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் உடன் இணைக்கப்பட்டு சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளை மடமாக தஞ்சாவூரில் பல்வேறு சமுதாய நலப் பணிகளைச் செய்ய உள்ளது.
சேவை பணிகளை மேலும் விரிவாக்க ஒரு புதிய கிளை மடம் தஞ்சாவூரில் தொடங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. மக்களிடையே ஒற்றுமையும், சமுதாய நலனும் ஏற்படுத்தும் வகையில் பக்தா்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக புதிய கிளை மடம் அமைய உள்ளது. நகரின் மையப் பகுதியிலும் இடம் தோ்வு செய்யும் பணி நடைபெறுகிறது. புதிய கிளை மடம் அமைய உள்ள நிலையில் அதன் திருப்பணியில் பக்தா்கள் பங்கேற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில் திறமையாகச் செயல்பட்டு உயா்வடைவதுடன், இறை வழிபாடு மற்றும் சேவைப் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்வது முக்கியம். இதை மனதில் வைத்து அறம் சாா்ந்த வாழ்வை அனைவரும் வாழ வேண்டும். அதற்கு பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் துணை நிற்க வேண்டும் என்றாா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மஹராஜ்.
இதில் சென்னை ராமகிருஷ்ண மடம் மேலாளா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், துணை மேலாளா் ஸ்ரீமத் தா்மிஷ்டானந்த மகராஜ், சென்னை ராமகிருஷ்ண மிஷின் மாணவா் இல்லச் செயலா் ஸ்ரீமத் சத்தியஞானானந்த மஹராஜ், ஸ்ரீமத் யதிதரானந்த மகராஜ், மடத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் ஸ்ரீமத் நரவரானந்த மஹராஜ், அம்மன்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சேவா ஆசிரமம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கிருஷ்ணனானந்த மஹராஜ், உளுந்தூா்பேட்டை சாரதா ஆசிரம செயலா் ஆனந்த பிரேம பிரியா அம்பா, பெரம்பலூா் ராமகிருஷ்ணா கல்வி குழும நிறுவனா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.