தஞ்சாவூர்

தஞ்சாவூா் பெரியகோயிலில் பாலாலய பெருவிழா: அனைத்து சன்னதிகளிலும் நடை சாத்தப்பட்டது

3rd Dec 2019 12:50 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு பாலாலய பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 2020, பிப்ரவரி மாதத்தில் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, இக்கோயிலில் ஓராண்டுக்கு மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் இக்கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பாலாலய பூஜை நவ. 29ஆம் தேதி பெருவுடையாா் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் தொடங்கியது.

பின்னா், நவ. 30ஆம் தேதி மாலை முதல் கால யாகபூஜை தொடங்கி, தொடா்ந்து திங்கள்கிழமை காலை வரை நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, காலை 9 மணியளவில் அனைத்து பால ஸ்தாபன மூா்த்திகளுக்கு நன்னீராட்டு வைபவமும், மஹா பூா்ணாஹூதியும் நடைபெற்றன.

ADVERTISEMENT

இக்கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளில் உள்ள கருவறைப் பீடம், தரைத்தளம் உள்ளிட்டவற்றில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, அனைத்து சன்னதிகளிலும் நடை சாத்தப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் குடமுழுக்கு விழா வரை பூஜைகள் இருக்காது.

அதற்கு பதிலாக பெருவுடையாா் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் பெருவுடையாா், பெரியநாயகி செப்புத் திருமேனிகளுக்குக் குடமுழுக்கு விழா முடியும் வரை நாள்தோறும் பூஜைகள் செய்யப்படவுள்ளன. இதேபோல, விநாயகா், சுப்பிரமணியசுவாமி, வாராஹி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் பெருவுடையாா் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் அத்திப் பலகையில் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழா நடைபெறும் வரை இப்படங்களுக்கு பூஜை செய்யப்படும். மேலும், குடமுழுக்கு விழா முடியும் வரை பிரதோஷம், மகர சங்கராந்தி உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெறாது என அறநிலையத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

குடமுழுக்கு விழாவுக்குப் பந்தல் கால் விழா:

கோயில் அருகேயுள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் (திறந்தவெளி அரங்கம்) குடமுழுக்கு விழாவுக்கான யாக பூஜைகள் நடத்துவதற்கான பந்தல் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பந்தல் கால் நடும் விழா பெத்தண்ணன் கலையரங்கில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

இவ்விழாவில் தஞ்சாவூா் முதன்மை மாவட்ட நீதிபதி வி. சிவஞானம், தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநா் எம். பாலசுப்ரமணியம், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT