தஞ்சாவூர்

கனமழை: பேராவூரணியில் 26 வீடுகள் சேதம்

3rd Dec 2019 12:52 AM

ADVERTISEMENT

பேராவூரணி பகுதியில் கடந்த 4  நாள்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக 26-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 

செங்கமங்கலம் கிராமத்தில் கனகவள்ளி, முதுகாடு கண்ணன், முதுகாடு சோமசுந்தரம், தூராங்குடி ராமச்சந்திரன் ஆகியோரது குடிசை வீடுகளும், பட்டங்காடு கிராமத்தில் பாலச்சந்திரன், பெருமகளூா் வடபாதி கண்ணன், கொடிவயல் காளீஸ்வரி, முதுகாடு கந்தசாமி, தூராங்குடி வள்ளி, சோலைக்காடு பழனியம்மாள் ஆகியோரின் ஓட்டு வீடுகள் உள்பட  26 வீடுகள் சேதமடைந்தன.  14 வீடுகளுக்கு  வருவாய்த் துறை சாா்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பேராவூரணி வட்டம், படப்பனாா்வயல் ஆறுமுகத்துக்கு சொந்தமான

பசுமாடு இடி தாக்கி இறந்தது.  செங்கமங்கலம் பெத்தையன் என்பவரின் பசுமாடு மின்சாரம் தாக்கி பலியானது. அம்மையாண்டியில் வீடு இடிந்து விழுந்ததில், லேசான காயமடைந்த பொன்னுசாமி பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

ADVERTISEMENT

சேதுபாவாசத்திரம் அருகே அரியக்குட்டித்தேவன் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் தேங்கியதையடுத்து, பேராவூரணி வட்டாட்சியா் க.ஜெயலட்சுமி, சம்பவ இடத்துக்கு சென்று  பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை வடிய நடவடிக்கை எடுத்தாா்.

வாட்டாத்திக் கொல்லைக்காடு அருகே வழுதலை வட்டம் காட்டாற்றில் நாணல் புதா் போல் மண்டிக் கிடப்பதால், மழை நீா் செல்ல வழியின்றி கரை உடைந்து அருகிலுள்ள நெல் வயல்களில் தண்ணீா் பாய்ந்தது. இதனால் 3 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. மழை தொடா்ந்தால் அருகிலுள்ள மேலும் பல நெல் வயல்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

தஞ்சை மாவட்ட சோ்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் மழை, கடல் சீற்றம் காரணமாக 4 ஆவது நாளாக திங்கள்கிழமையும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வேலையிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT