தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் சாதனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவையாறு முதன்மைச் சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதிவாகும் காட்சிகள் அலுவலகத்துக்குள் உள்ள தனி அறையில் வைக்கப்பட்டிருந்த ஹார்டு டிஸ்க்கில் சேமிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை அலுவலகத்துக்கு ஊழியர்கள் சென்றபோது முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், உள்ளே சென்று பார்த்தபோது, தனி அறையில் இருந்த ஹார்டு டிஸ்க் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. வேறு எந்தப் பொருட்களும் திருட்டு போகவில்லை எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் பெரியண்ணன், ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனர்.