தஞ்சாவூர்

மேட்டூரிலிருந்து 20,000 கனஅடி நீரை திறக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

29th Aug 2019 08:45 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் திமுக சார்பில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விவசாயப் பணிகளை உரிய காலத்தில் தொடங்கினால்தான் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பயனடைவர். எனவே, காவிரி டெல்டாவில் நீர் பாசனத்துக்காகவும், விவசாயப் பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்கு வசதியாகவும், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பகுதிக்கு விநாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீரை திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
விளைநிலங்களையும், நிலத்தடி நீரையும், வேளாண்மையையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற திட்டங்களை மத்திய அரசுக் கைவிட வேண்டும். மேலும், காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசும், மாநில அரசும் முன்வர வேண்டும். 
மேக்கேதாட்டுவில் புதிய அணைக் கட்டுவதற்குத் தமிழக அரசு எக்காரணம் கொண்டும், ஏதேனும் அழுத்தத்துக்கு ஆட்பட்டு அனுமதி வழங்கக் கூடாது. மத்திய அரசு மீண்டும் கர்நாடகத்தின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. இரு மாநில விவசாயிகளின் நலன் கருதி இந்த அணைக் கட்டும் திட்டத்தைக் கர்நாடக மாநில அரசுக் கைவிட வேண்டும்.
கஜா புயல் பாதிப்புகளைச் சரி செய்து, வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காதது, பயிர் காப்பீடு, மின் இணைப்பு, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காதது உள்ளிட்ட காவிரி டெல்டா விவசாயிகளின் குறைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும். மேலும், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாத்திட உயர் முன்னுரிமை வழங்க வேண்டும். 
நாட்டின் ஒற்றுமை ஓங்கிட கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்துக்குள் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டங்களை மேலும் கால தாமதப்படுத்தாமல் நிறைவேற்ற அதிமுக அரசு முன் வர வேண்டும்.
விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்துவதற்குச் சலுகைகளும், ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT