தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை மாதா பிறப்புப் பெருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.30) மாலை தொடங்குகிறது.
இதில், கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் எப். அந்தோணிசாமி கொடியைப் புனிதம் செய்து ஏற்றி வைக்கவுள்ளார்.
இவ்விழா தொடர்ந்து செப். 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழா காலத்தில் நாள்தோறும் மாலையில் சிறப்புத் திருப்பலியும், மறையுரையும், சிறு சப்பர தேர் பவனியும் நடைபெறவுள்ளன. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செப். 8-ம் தேதி மாலை திருப்பலியும், மரியன்னையின் அக்கறை காட்டும் கரங்கள் என்ற தலைப்பில் மறையுரையும் நடைபெறவுள்ளன. பின்னர், இரவில் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரத் தேர் பவனி நடைபெறும். நிறைவு நாளான செப். 9-ம் தேதி காலை திருப்பலியும், மரியன்னையின் ஆசீர்வதிக்கும் கரங்கள் என்ற தலைப்பில் மறையுரையும் நடைபெறவுள்ளன.