தஞ்சாவூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புகாரின் பேரில் இரு விளம்பரப் பதாகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திங்கள்கிழமை வந்தார். அப்போது, ராமநாதன் ரவுன்டானா பகுதியில் இருந்த விளம்பரப் பதாகைகள் குறித்து காவல் துறையினரிடம் டிராபிக் ராமசாமி புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த விளம்பரப் பதாகைகளை தெற்கு போலீஸார் அகற்றினர். இதுதொடர்பாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், ரயிலடி உள்ளிட்ட இடங்களில் இருந்த விளம்பரப் பதாகைகளும் அகற்றப்பட்டன. இந்நிலையில், புதிய பேருந்து நிலையப் பகுதிக்கு புதன்கிழமை சென்ற டிராபிக் ராமசாமி அப்பகுதியில் இருந்த விளம்பரப் பதாகைகள் குறித்து காவல் துறையினரிடம் புகார் செய்தார். இதன் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற மருத்துவக் கல்லூரி போலீஸார் இரு விளம்பரப் பதாகைகளை அகற்றினர்.